சாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது வழக்கு
கடம்பத்தூர், மப்பேடு பகுதியில் அனுமதி இல்லாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பேரம்பாக்கம்,
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கடம்பத்தூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பா.ம.க. நிர்வாகிகள் 20 பேர் பொதுமக்களுக்கும் போக்குவத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 20 பேர் மீதும் கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல மப்பேடு அருகே உள்ள புதுப்பட்டு சந்திப்பு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் 15 பேர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.