சேலம் மாமாங்கம் பகுதியில் பேனர் கிழிப்பு: பா.ம.க.- தி.மு.க. மோதல்-போலீஸ் குவிப்பால் பரபரப்பு


சேலம் மாமாங்கம் பகுதியில் பேனர் கிழிப்பு: பா.ம.க.- தி.மு.க. மோதல்-போலீஸ் குவிப்பால் பரபரப்பு
x

சேலம் மாமாங்கம் பகுதியில் பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக பா.ம.க.- தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர். போலீஸ் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

வாக்குவாதம்

சேலம் மாநகராட்சி 1-வது வார்டு மாமாங்கம் ஊற்றுகிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அருள் எம்.எல்.ஏ. முயற்சியால் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதாக பா.ம.க.வினர், ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் கிளாக்காடு- ஊற்றுகிணறு சாலையில் பேனர் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், மாநகராட்சி நிதியில்தான் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது என்று கூறினார். தொடர்ந்து பா.ம.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அங்கு மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

பேனர் கிழிப்பு

அப்போது அங்கிருந்த பேனரை தி.மு.க.வினர் கிழித்தனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

அப்போது அங்கு வந்த பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பேனர் வைப்பதை தி.மு.க.வினர் எப்படி தடுக்கலாம்? என்று போலீசாரிடம் முறையிட்டனர். அப்போதும் தி.மு.க.- பா.ம.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு

அங்கிருந்தவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், மாநகராட்சி அனுமதி இல்லாமல் யாரும் பேனர் வைக்கக்கூடாது என்றனர். அங்கு இருந்த பா.ம.க. பேனர் மற்றும் தி.மு.க. கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து இரு தரப்பினரையும் எச்சரிக்கை செய்த போலீசார் அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story