நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, அத்துமீறல்களுக்கு பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, அத்துமீறல்களுக்கு பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி போராட்டம்
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெய்வேலியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற தடியடி உள்ளிட்ட வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் பா.ம.க. எந்த வகையிலும் பொறுப்பல்ல. முற்றுகை போராட்டம் தொடங்கியது முதல் நான் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் வரை மிகவும் அமைதியாகவும், கட்டுக்கோப்புடனும்தான் நடைபெற்றன. பா.ம.க.வினர் எந்தவித விரும்பத்தகாத செயலிலும் ஈடுபடவில்லை. பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு தொண்டரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி ஆடைகளை கிழித்து காயப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்துதான் நிலைமை மோசம் அடைந்தது. இளைஞரை போலீசார் தாக்கியதற்காக வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
விடுதலை செய்ய வேண்டும்
போலீசாரின் தடியடியில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்திற்கும் போலீசார்தான் காரணம். இதற்காக அவர்கள் மீதுதான் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக அப்பாவி பா.ம.க.வினரை போலீசார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். தடியடிக்கு காரணமான போலீசார் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
விரக்தியின் விளிம்பு
மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு நான் வலியுறுத்துவது என்னவென்றால், விவசாயிகளின் உணர்வுகளை மதியுங்கள். விவசாயிகளை வாழ விடுங்கள் என்பதுதான். ஆனால், தமிழ்நாடு அரசோ மீண்டும், மீண்டும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்கு விரட்டியடிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், சிங்கூர் நந்திகிராமத்தில் என்ன நடந்ததோ? அதுதான் இங்கும் நடக்கும் என்பதை தமிழக அரசுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து என்.எல்.சி-க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தவேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.