தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் பணி
பெரம்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
உலகத்தரத்திலான வசதிகள்
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் ஆகியோர் சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில்நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, 'அம்ரித் பாரத் ரெயில்நிலையங்கள்' என்ற திட்டத்தின் கீழ் ஆயிரத்து 309 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், இந்தியா முழுவதும் 508 ரெயில்நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 6-ந்தேதி (நாளை) அடிக்கல் நாட்டுகிறார்.
இதில், தெற்கு ரெயில்வேயில் உள்ள 25 ரெயில்நிலையங்களும் அடங்கும். இந்த ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில் இந்தத்திட்டம் இருக்கும். 'லிப்டு', பயணிகள் நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருக்க விசாலமான அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடர்பு முறை, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிகட்டுகள், வாகன நிறுத்தும் வசதி, மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
4-வது வழித்தடம்
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரெயில்நிலையங்களும், புதுச்சேரி ரெயில்நிலையம் மற்றும் கேரள மாநிலத்தில் காசர்கோடு, பையனூர், வடக்காரா, திரூர் மற்றும் சொரணூர் ஆகிய 5 ரெயில்நிலையங்களும், கர்நாடக மாநிலத்தில் மங்களூரு என மொத்தம் 25 ரெயில்நிலையங்கள் ரூ.616 கோடியில் முதல் கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளது. அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டப்பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது புதிய வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கான, பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம். அனைத்து முக்கிய ரெயில்நிலையங்களிலும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவிடுவோம். பறக்கும் ரெயில் நிலையத்தை சென்னை மெட்ரோ ரெயிலுடன் இணைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.