ஆவடி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
ஆவடி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 47). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு பாலாஜி (17) என்ற மகனும், ஹரிணி (14) என்ற மகளும் உள்ளனர்.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பாலாஜி, பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் ஹரிணி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை விஜயன், அவருடைய மனைவி ஜெயலட்சுமி இருவரும் பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி எடுக்க ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். வீட்டில் பாலாஜி மற்றும் அவரது தங்கை ஹரிணி இருவர் மட்டும் இருந்தனர்.
இந்தநிலையில் பாலாஜி, படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அண்ணன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹரிணி, கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது பாலாஜி, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பாலாஜி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியது.அதில் அவர், "நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. என் இஷ்டத்துக்கு வாழ விடுவதில்லை. 30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா?. நான் உயிருடன் இருந்து என்ன பண்ணப்போகிறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பிளஸ்-2 படித்து வந்த பாலாஜி, ஜே.இ.இ. தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.