அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பிளஸ்-2 மாணவர் உடல் கருகி பலி
மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய பிளஸ்-2 மாணவர் உடல் கருகி பலியானார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். அவருடைய மகன் பிரவீன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.
பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். தன்னுடன் படிக்கும் தனது நண்பர்களான நாகனம்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (17), நரிப்பட்டியை சேர்ந்த நரசிம்மன் (17) ஆகியோருடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் ஓட்டலுக்கு செல்ல முடிவு செய்ததாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிள் மீது மோதல்
இதனையடுத்து ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து, திண்டுக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டினார். ஆகாஷ், நரசிம்மன் ஆகியோர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தனர்.
ஒட்டன்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ், நரசிம்மன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பிரவீன் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
தீயில் கருகி பலி
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் திடீரென பஸ்சில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது, பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் பிரவீன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சும் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. முன்னதாக பஸ்சில் தீப்பற்றியதும் அதில் பயணம் செய்த 41 பயணிகளும் சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.