மரத்தில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே மரத்தில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலை கொழுந்துபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள குளத்தின் அருகே நேற்று காலையில் சிலர் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக சின்னக்கோவிலாங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூக்கில் தொங்கியவர் குறித்து விவரம் தெரியவந்தது. அதாவது, திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கதிரவன் (வயது 16). இவர் சங்கரன்கோவில் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலையில் குளத்தின் அருகே சென்ற கதிரவன் அங்குள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது ெதரியவந்தது.
எனினும் கதிரவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர் படித்த பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் கதிரவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சங்கரன்கோவில் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.