பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது - தமிழ் தேர்வு எளிமை என மாணவர்கள் கருத்து
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழ்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழ்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
650 பேர் வரவில்லை
மதுரை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வுகளை மாவட்டத்தை சேர்ந்த 326 பள்ளிகளில் இருந்து 17056 மாணவர்களும், 18223 மாணவிகளும் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளஸ்-1 பொதுத்தேர்வில் நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுக்கு பள்ளிகளில் படிக்கும் 34,633 மாணவ, மாணவிகளில் 650 பேர் தேர்வெழுத வரவில்லை. தனித்தேர்வர்கள் 493 மாணவர்களில் 77 பேர் தேர்வெழுத வரவில்லை.
சிறையில் இருந்து எழுதும் 14 பேரில் ஒரேயொருவர் மட்டும் தேர்வெழுதவில்லை. அதே போல, பிறமொழிப்பாட தேர்வுகளில் இந்தி மொழிக்கு 59 மாணவர்களும், சமஸ்கிருதத்துக்கு 231 மாணவர்களும், பிரெஞ்சு மொழிக்கு 443 மாணவர்களும் தேர்வெழுதினர். உருது மொழித்தேர்வுக்கு விண்ணப்பித்த 14 பேரில் ஒரேயொருவர் மட்டும் தேர்வெழுதவில்லை.
பொதுத்தேர்வுகளை கண்காணிக்க மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் என தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட 3,400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பறக்கும் படையினர் தேர்வுமையங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு குழந்தைகளுக்கு (மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக) சொல்வதை எழுதுபவர்கள் தனியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேர்வு எளிமை
புதூர் அல்அமீன் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் மீராமைதீன்:தமிழ் மொழிப்பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. பள்ளியில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வுகளிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில் அனைத்து கேள்விகளும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. முதல் 5 இயலில் இருந்து 2 மதிப்பெண், 4 மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் வந்திருந்தன. மொழிப்பயிற்சி வினாக்கள் எளிமையாக இருந்தது.
திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் பள்ளி மாணவி சுவாதி:
அனைத்து மதிப்பெண் கேள்விகளிலும் ஒரேயொரு கேள்வி மட்டும் சுயமாக சிந்தித்து எழுதும்படி இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. நெடுவினா முழுவதும், மனப்பாட பகுதி, மொழிப்பயிற்சி ஆகியன புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என நம்பிக்கை உள்ளது.