ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1, 2-வது வார்டுகளை சேர்ந்தது காமராஜர் நகர். இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் இதுவரை கழிவுநீர் கால்வாய், சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி மழை நேரத்தில் கழிவுநீருடன், மழை நீரும் கலந்து தெரு முழுவதும் சகதியாக மாறி தெருவில் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கழிவுகள் வெளியேற வழியின்றி தேங்கி இருப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் ெபாதுமக்கள் பல முறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆதலால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மயானத்திற்கு செல்லும் வழியில் கழிவுகள் அதிகமாக தேங்கி உள்ளது. தண்ணீர் வசதியும் இல்லாததால் இறுதி சடங்கிற்கு செல்லும் போது தண்ணீரை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள குப்பைகளை அகற்றவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.