130 எக்டேரில் மரக்கன்றுகள் நட முடிவு


130 எக்டேரில் மரக்கன்றுகள் நட முடிவு
x

130 எக்டேரில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் எசனை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். அப்போது கலெக்டர் மாணவ-மாணவிகளிடம் இதேபோல் உங்கள் வீட்டு வளாகத்திலும், பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும், என்றார். மேலும், நடப்படும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து மரமாக வளர்க்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வனத்துறையினரையும், பள்ளி நிர்வாகத்தினரையும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் கலெக்டர் கற்பகம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையினை பெருக்குவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்கு பள்ளி வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 130 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்குள் 130 எக்டேரில் மரக்கன்றுகளை நடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மட்டுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும், தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும், என்றார். அப்போது மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வனச்சரகர் பழனிகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story