1 லட்சம் சோலை மரக்கன்றுகள் நடவு
கொடைக்கானல் மலைப்பகுதியில் 1 லட்சம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன என்று மாவட்ட வன அதிகாரி கூறினார்.
காட்டுத்தீ
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அணைத்தனர். நேற்று முன்தினம் 'டால்பின்நோஸ்', வட்டக்கானல், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் காட்டுத் தீப்பிடித்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினார்.
இந்த காட்டுத்தீ குறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப்பிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அடர்ந்த வனப்பகுதிகளில் உயர் அழுத்த மின் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. அவற்றில் அடிக்கடி உராய்வுகள் ஏற்பட்டு தீ பிடிக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததின் அடிப்படையில் தற்போது அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்படும் தீயானது வனப்பகுதிகளில் பரவுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீ வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோலை மரக்கன்றுகள் நடவு
கொடைக்கானல் வனப்பகுதியில் 12 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களிப்பதற்காக சுமார் ரூ.15 கோடி செலவில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மோயர் பாயிண்ட், பில்லர் ராக்ஸ் ஆகிய இடங்களில் பயோ கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக சோலார் மின்சாரம் மூலம் எந்திரங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பியர்சோலா அருவி பகுதியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக அதனை திறப்பது குறித்து நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படியும் முதல்-அமைச்சரின் பசுமை திட்டத்தின் கீழ் பேரிஜம் பகுதியில் சுமார் 100 எக்டேர் பரப்பளவில் ஏற்கனவே இருந்த வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டது. அங்கு 50, ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மன்னவனூர் மற்றும் பூம்பாறை வனச்சரக பகுதியில் உள்ள சுமார் 100 எக்டேர் பரப்பிலான வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அங்கும் 50 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை கொண்டு வரக்கூடாது. அவற்றை நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல புகை பிடிக்கக் கூடாது. தங்கும் விடுதிகளில் குளிருக்கு பாதுகாப்பாக தீ மூட்டக் கூடாது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.