'தினத்தந்தி' செய்தி எதிரொலி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8,500 மரக்கன்றுகள்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8,500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மா, புளி, நாவல் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8,500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மா, புளி, நாவல் மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
சாலையோர மரங்கள்
மன்னர்கள் ஆட்சி காலத்தில் சாலையோரங்களில் மரங்களை அதிக அளவில் நட்டனர். ஒரு ஊரில் இருந்து மக்கள் இன்னொரு ஊருக்கோ அல்லது நகரத்திற்கோ செல்லும்போது அவர்கள் நடந்தோ? அல்லது குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு அவர்கள் செல்லும்போது வழியில் இளைப்பாறுதவற்காக இந்த மர நிழலை பயன்படுத்தினர்.
இதற்காக மன்னர்கள் பழம் தரக்கூடிய மரங்கள், நிழல் தரக்கூடிய மரங்கள் என இருவகையான மரங்களை நட்டு பராமரித்து வந்தனர். பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் மாமரம், நாவல்பழம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம் என இடத்திற்கு ஏற்ற மாதிரி, தேவைக்கு ஏற்றவாறு மரங்களை நட்டனர்.
சோலையாக காணப்பட்ட சாலை
அவற்றை நடுவது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள கிராம உதவியாளர்கள் மற்றும் மரங்களை பராமரிப்பதற்காகவே ஆட்களை நியமித்து அதனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுத்தினர்.அது இன்னமும் பல இடங்களில் சாலையில் செல்லும் பொழுது சோலையாக குடை போல சாலைகள் காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல மரங்கள் வெட்டப்படுகின்றன.
தஞ்சை- மன்னார்குடி சாலை
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சை-பட்டுக்கோட்டை, தஞ்சை- திருவையாறு ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் சோலையாக காணப்பட்ட இடங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து வெட்டப்பட்ட பகுதிகளில் புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும் என்று 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து தஞ்சை கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் தஞ்சை, ஒரத்தநாடு உட்கோட்டத்தில் உள்ள தஞ்சை- திருச்சி, வல்லம், தஞ்சை- திருவையாறு சாலை, தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை, திருக்கானூர்பட்டி- ஒரத்தநாடு சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8,500 மரக்கன்றுகள்
இந்த பகுதிகளில் மா, புளி, நாவல், அரச, ஆலமரங்கள் என பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. மின்கம்பங்கள், ஊர் அமைந்துள்ள பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் 7 மீட்டருக்கு ஒரு மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு வருகின்றன. சாலைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனங்களே இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
தற்போது இந்த பகுதிகளில் மட்டும் ஆர்.ஆர். நிறுவனம் சார்பில் 8,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதி நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மரக்கன்றுகளை நட்டு, அதன் அருகே முள்கூண்டு அமைத்து, அதனை பச்சை நிறத்தினால் ஆன வலையை கொண்டு சுற்றி ஆடு, மாடு தின்று விடாதவாறு பாதுகாப்பாக அமைத்து வருகின்றனர்.