ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற திட்டம்
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.
வேலூர்
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பென்ட்லேண்ட் மருத்துவமனை
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ஆரம்ப கட்டத்தில் சிறிய மருந்தகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1915-ம் ஆண்டு மருத்துவமனையாக உருபெற்றது. இந்த மருத்துவமனை அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பென்ட்லேண்டால் திறந்து வைக்கப்பட்டது. எனவே இந்த மருத்துவமனை பென்ட்லேண்ட் மருத்துவமனை என்று பெயர் பெற்றது. இங்கு ஏராளமான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
போதிய இடவசதி இல்லாததால் வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது இங்கிருந்து மருத்துவ உபகரணங்கள் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பென்ட்லேண்ட் மருத்துவமனை பயன்படுத்தப்படாமல் இருந்தது. வெகு தூரம் சென்று மருத்துவ சிகிச்சைகள் பெற வேண்டி இருந்ததால் நோயாளிகளின் வசதிக்காக புறநோயாளிகள், மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி
தற்போது இங்கு புறநோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைகள், காது மூக்கு தொண்டை சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 12 டாக்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல நாள் கோரிக்கையாக இங்கு அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மருத்துவமனை ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் 7 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.