கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைக்க தடை


கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைக்க தடை
x

கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், நகரமைப்பு அலுவலர் முரளி, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் வெங்கட்ராமன், நிர்வாகி வெங்கட், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசீலன், பாரதீய ஜனதா கட்சி பெருமாள், பந்தல்பரசுராமன், பா.ம.க. கவுன்சிலர் சரவணன், அ.ம.மு.க. ஆனந்தன், தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுந்தர்ராஜா, பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேனர் வைக்க தடை

கூட்டத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அரசியல் கட்சியினர் யாராவது பொது இடங்களில் பேனர் வைத்தால், முதல் கட்டமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சாலையின் நடுவே போடப்பட்ட தடுப்பு கட்டையில் கட்சி கொடிக்கம்பம் நடுதல், பிரதிபலிப்பானை மறைத்து கொடி, பேனர் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டம் நடத்த வேண்டும். அப்படி நடக்கும் இடத்தில் மட்டும் விளம்பர பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றனர்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

அப்போது அ.தி.மு.க. பகுதி செயலாளர் வெங்கட்ராமன், சட்டத்தை மதிக்கிறோம். ஆனால் ஒரு தலைபட்சமாக பேனரை அகற்றியதால் தான் பிரச்சினை ஏற்பட்டது. ஆகவே எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்ட அதிகாரிகள், இந்த உத்தரவு அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்றனர். தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருவதாக அரசியல் கட்சியினர் கூறி சென்றனர்.


Next Story