விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடங்கள்; கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் ஆகியன நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.
இதனை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிபந்தனைகள்
பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டிக், பாரிஸ் பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசுன்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
கரைக்க வேண்டிய இடங்கள்
விநாயகர் சிலைகளை கடையம் பகுதியில் ராமநதி அணையிலும், ஆழ்வார்குறிச்சியில் கடனா ஆற்றிலும், தென்காசியில் யானை பாலம் அருகிலும், குற்றாலத்தில் இலஞ்சி சிற்றாற்றிலும் கரைக்க வேண்டும். செங்கோட்டையில் குண்டாறு அணை, புளியறையில் லாலா குடியிருப்பு அரிகர ஆறு, அச்சன்புதூரில் கரிசல் குடியிருப்பு ஹனுமான் ஆறு, பாவூர்சத்திரம் குளம், கடையநல்லூரில் மேல கடையநல்லூர் தாமரைகுளம், கருப்பாநதி அணை, வாசுதேவநல்லூரில் நெற்கட்டும்செவல் ராஜ் பிரிக்ஸ் சேம்பர் சிமெண்டு தொட்டி, வாசுதேவநல்லூரில் ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.