பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு?
பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு?
நாகூர் வெட்டாற்று கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள படகு மற்றும் வலைகள் எரிந்து நாசம் அடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைபர் படகு
நாகை மாவட்டம் நாகூர் மேல்பட்டினச்சேரி ஆரியநாட்டு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு நாகூர் வெட்டாற்று பாலம் கரையோரத்தில் படகை நிறுத்தி வைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வமணி மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு தனது படகை கரையில் நிறுத்தி வைத்திருந்தார்.
ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வலைகள் சேதம்
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செல்வமணியின் பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அருகில் உள்ள வலைபின்னும் கூடத்தில் தூங்கி கொண்டிருந்த மீனவர்கள் இதனை பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து செல்வமணிக்கு அவர்கள் தகவல் ெதரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து செல்வமணி பார்த்தபோது ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பைபர் படகு தீயில் எரிந்து சேதம் அடைந்து இருந்ததும், அந்த படகில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள வலைகளும் எரிந்து நாசம் அடைந்ததும் தெரிய வந்தது.
விசாரணை
இதுகுறித்து நாகூர் போலீசில் செல்வமணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து செல்வமணியின் பைபர் படகுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயில் எரிந்து சேதமடைந்த பைபர் படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர் செல்வமணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேதம் அடைந்த படகை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பார்வையிட்டனர்.