சென்னையில் பிங்க் ஆட்டோ - சட்டசபையில் அறிவிப்பு


சென்னையில் பிங்க் ஆட்டோ - சட்டசபையில் அறிவிப்பு
x

சென்னையில் பிங்க் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அறிவிப்புகள் பின்வருமாறு:-

பிங்க் ஆட்டோ:-

சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும், அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை (பிங்க் ஆட்டோ) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக தனி வண்ணம் கொண்ட பெண்களுக்கான உதவி எண் மற்றும் இருப்புநிலைகலன் அமைப்பு (ஜிபிஎஸ்) பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.

வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலத்திட்டம்:-

சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக தனிநபர் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் ஏற்றம் பெற்றுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களான முதல்-அமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை 72,000 ரூபாயிலிருந்து ரூ.1.20.000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் ஏழை குடும்பங்களை சார்ந்த தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறுவர்.

மகளிர் விடுதி:-

வீட்டை விட்டு வெளி இடங்களில் பணிபுரிய வரும் மகளிருக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு மற்றும் இனிமையான சூழலுடன் நியாயமான கட்டணத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

பணிபுரியும் மகளிர் விடுதிகளை உருவாக்குதல், புதுப்பித்தல், வடிவமைத்தல், கட்டுதல், மேம்படுத்துதல், செப்பனிடுதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் செய்து வருகிறது.

திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில், 190 படுக்கைகள் கொண்ட அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடி ரூபாய் செலவினத்தில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் மறுசீரமைக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 200 பெண்களுக்கு சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.

* ரூ.1 கோடியில் 6 அரசு சேவை இல்லங்கள், 27 குழந்தை காப்பக மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படும்.

* அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த பயிலரங்கங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story