ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம்
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைகால விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. கோடைகால விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. இதேபோல் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
இதனிடையே கோடைகால விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராட காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
தனுஷ்கோடி
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.
இவ்வாறு தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் 3-ம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.
குறிப்பாக 2 கடல் சேருமிடமான அரிச்சல் முனை கடற்கரை சாலை வளைவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் வருகை இனி சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.