குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருவெண்காடு நெய்தவாசல் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு-நெய்தவாசல் சாலை வழியாக பூம்புகார், நாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம், புது குப்பம், நெய்தவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் வாகனங்கள் மூலமாக சென்று வருகின்றனர். அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில் மங்கைமடம், திருவெண்காடு, மணி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள் அதிகளவு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும், இந்த சாலையில் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன.
அகற்றப்படுமா?
இந்த இறைச்சி கழிவுகளை ஏராளமான நாய்கள் மற்றும் பன்றிகள் வந்து உண்கின்றன. அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழுகின்றன. இதனால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் திறந்தவெளியில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, மேற்கண்ட சாலையோரம் குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு இனி இந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.