சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
எருமப்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எருமப்பட்டி
சாலை மறியல்
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டியிலிருந்து கோம்பைக்கு செல்லும் ஆத்துவாரி சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோம்பையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறிவு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த சேரும், சகதியுமான மண் சாலையில் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் பாதி வழியில் நின்றது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் குறித்து அங்கு விரைந்து வந்த எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலகுமார் மற்றும் பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் தனம் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தை
அப்போது இது குறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அப்போது இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் மிகவும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது, இதனால் வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை எனவும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.