மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புகைப்பட கண்காட்சி


மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புகைப்பட கண்காட்சி
x

உலக பாரம்பரிய வாரத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பாரம்பரிய சின்னங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு

சர்வதேச நாடுகளிலும், இந்தியாவிலும் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதி பழமை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையை உணர்த்துகின்றது. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மேலும் அவற்றை பாதுகாப்பது குறித்து இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நேற்று முதல் வருகிற 25-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய வாரத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி இலவசமாக பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணிபுரியும் பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜெர்மன், இஸ்ரேல் நாடுகளை சேர்ந்தவர்கள் தமிழர்களின் கலை, காலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையிலும், உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடும் வகையிலும் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் தமிழர்களின் கலாசாரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து வந்தனர். அவர்கள் வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு வேட்டி அணிந்த நிலையில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இலவசமாக சுற்றுலா பயணிகளை புராதான சின்னங்களை காண அனுமதித்ததால் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியது. உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடும் வகையில் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் பாரம்பரிய சின்னங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. இதனை சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில் முன்னிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு ஒரு வாரம் நடைபெறும் புகைப்பட கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறையின் பொறியியல் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜிலானிபாஷா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கடற்கரை கோவில் வளாகத்தில் சென்னை கலாஷேத்ரா குழுவினரின் பரத நாட்டியம், குச்சுபுடி மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.


Next Story