தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட 4-ம் கட்ட பணி தொடக்கம்


தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட 4-ம் கட்ட பணி தொடக்கம்
x

லெவிஞ்சிபுரம் மற்றும் செட்டிகுளம் பஞ்சாயத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டத்தில் உள்ள 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக 605 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு கட்டங்களாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 4-ம் கட்டமாக லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து ரஜகிருஷ்ணாபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், லெவிஞ்சிபுரத்தில் 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், செட்டிகுளம் பஞ்சாயத்து செட்டிகுளத்தில் 5.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கைலாசபுரம், விஸ்வநாதபுரம், ஜெயமாதாபுரம், செட்டிகுளம் பஞ்சாயத்து சிவசக்திபுரம் ஆகிய இடங்களில் தலா 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டவும், செட்டிகுளத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்தந்த பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் செட்டிகுளம் பஞ்சாயத்து புதுமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும், செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையையும் சபாநாயகர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் கூட்டப்புளி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவ-மாணவிகளுக்கும், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவ-மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: -

605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் உள்ள 831 கிராமங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவு பெறும் வகையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது 831 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து தன்னிறைவு பெறுவார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திலே முன்னோடி திட்டமாக அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறையை ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி பயல ஏதுவாக உள்ளது. இதன்மூலம் மாணவ-மாணவிகள் கல்வி செல்வத்தை எளிதாக பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story