ஏரியில் மூழ்கி மருந்தாளுனர் பலி
குன்னம் அருகே ஏரியில் மூழ்கி மருந்தாளுனர் பலியானார்.
மருந்தாளுனர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான அந்தூர் கிராமத்திற்கு வந்தார். அதன்பின்னர் அந்தூர் கிராமத்தில் உள்ள நடு ஏரியில் குளிக்க செல்வதாக தனது தம்பி கமலக்கண்ணனிடம் கூறி சென்றதாக கூறப்படுகிறது.
ஏரியில் மூழ்கி பலி
இதற்கிடையே இரவு நீண்ட நேரமாகியும் சத்தியமூர்த்தி வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கமலக்கண்ணன் தனது அண்ணன் ஏரியில் குளிக்க செல்வதாக கூறியதையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது சத்தியமூர்த்தி ஏரியில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நீச்சல் தெரியாத சத்தியமூர்த்தி ஏரியின் கரையின் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.