ஈரோட்டில் இடைத்தேர்தலுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்- கலெக்டரிடம், மதுப்பிரியர்கள் மனு
ஈரோட்டில் இடைத்தேர்தலுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்- கலெக்டரிடம், மதுப்பிரியர்கள் மனு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியை சேர்ந்த மதுப்பிரியர்கள், கலெக்டரிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜெயகோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை தனியார் வசம் இருக்கும் போதில் இருந்து செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தற்காலிகமாக மூடப்பட்டு, தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நாங்கள் மது வாங்குவதற்காக 5 கிலோ மீட்டர் வரை வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்லும்போது சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போலீசார் வாகன பரிசோதனை செய்யும் போது பல வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்து பல ஆயிரம் ரூபாய்களை அபராதமாக விதிக்கின்றனர். இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் நாங்கள் மிகவும் பாதிப்படைக்கிறோம். எனவே எங்கள் பகுதியில் இடைத்தேர்தலுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.