பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x

பா.ஜனதா நிா்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி,

பா.ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவராக இருப்பவர் விவேகம் ஜி.ரமேஷ். இவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10.25 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

அந்த ஆம்னி பஸ் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழே இணைப்பு சாலையில் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென மேம்பாலத்தில் இருந்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை ஆம்னி பஸ்சை நோக்கி வீசினர்.

ஆனால், அந்த பெட்ரோல் குண்டு ஆம்னி பஸ் மீது படாமல் பஸ்சின் முன்பு சாலையில் விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

காரை சேதப்படுத்திய கும்பல்

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், பா.ஜ.க.வில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில், தனது காரை நிறுத்தியிருந்தார்.இந்நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story