சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் -மேயரிடம் மனு


சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் -மேயரிடம் மனு
x
தினத்தந்தி 18 Oct 2023 12:30 AM IST (Updated: 18 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன், பாளையங்கோட்டை பகுதியில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மேயரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற ராஜா. இவருடைய மகள் ரேணுகா. 3-ம் வகுப்பு பள்ளி மாணவியான இவள் நேற்று பள்ளி சீருடையுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மேயரிடம் மனு கொடுத்தாள்.

அந்த மனுவில், "நான் நெல்லை டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியை சுற்றி சுகாதார சீர்கேடுகள் அதிகம் உள்ளன. அதை சரிசெய்ய வேண்டும். பள்ளிக்குச்செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலைகளை உடனே சரிசெய்ய வேண்டும். மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. அதை பிடிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தெரு விளக்கு வசதி

நெல்லை மாநகராட்சி 30-வது வார்டு ஸ்ரீபுரம் பகுதியில் சீரான சாலை அமைத்து தரக்கோரி என்று அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை 7-வது வார்டு காமராஜர்நகர் ஜானகி தெரு மற்றும் 40 அடி மண் சாலையில் உள்ள 25 மின்கம்பங்களில் புதிய தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும். குடிநீர் திட்டத்திற்காகவும், பாதாள சாக்கடை திட்டத்திற்கும் தோண்டப்பட்டதால் சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளது. உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் காமராஜ் நகர் மக்கள் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் கழிவுநீர் ஓடை அமைத்து தரக்கோரி ஊர் மக்கள் கொடுத்தனர்.

நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் கொடுத்த மனுவில், "நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் மேம்பாலம் முதல் ஆர்ச் வரை மழைநீர் வடிய ஓடை அமைத்தார்கள். ஆனால் சில இடங்களில் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாதபடி காங்கிரீட் போட்டு மூடிவிட்டார்கள். இதனால் மழைநீர் வடியாமல் கடைக்குள் தண்ணீர் வருகிறது. இதை உடனே சரிசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.


Next Story