மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு மனு


மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு மனு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தினர் மனு அனுப்பி உள்ளனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட கிளை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சார துறை அமைச்சர், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மற்றும் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்குவதற்கு உபயோகப்படுத்துவதற்கான மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.35-ல் இருந்து ரூ.7.50-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது. உபயோகப்படுத்தும் மின் அளவுக்கு மட்டுமின்றி கிலோ வாட் ஒன்றுக்கு முதல் நிலை கட்டணம் உயர்வு (1 கே.வி.க்கு ரூ.35-ரூ.150), பீக் ஹவர்ஸ் (காலை 6-10 மணி, மாலை 6-10 மணி) கட்டண உயர்வு எல்.டி. சர்வீசுக்கு (0-25 சதவீதம்), ஆண்டுக்கு 6 சதவீத மின்கட்டண உயர்வு என்று அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கட்டண உயர்வு தொழிற்சாலைகள் அழிவதற்கான முதல் படி ஆகும்.

தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும்போதே மின்இணைப்புக்கான டெபாசிட் தொகை (1கே.வி.க்கு ரூ.330), மின்கம்பம், அதற்கு தேவையான மின்இணைப்பு கருவிகளுக்கான தொகையை செலுத்தி மின்இணைப்பு பெறப்பட்டு உள்ளது. மேலும் பவர் பேக்டர் அபராத கட்டணம், டிரான்ஸ்பார்மர் லீக்கேஜ் கட்டணம், மின் கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி. என உபயோகிப்பாளரிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர் எதற்காக இந்த கட்டண உயர்வு?

மேலும் பீக் ஹவர்சில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காது. பீக் ஹவர்ஸ் கட்டண உயர்வில் 15 சதவீத கட்டண குறைப்பு என்பது தொழிற்சாலைகளுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே சிறு, குறு தொழிற்சாலைகள் உபயோகப்படுத்தும் மின் அளவுக்கான கட்டணத்தை (யூனிட் சார்ஜ்) தவிர பிற கட்டண உயர்வை திரும்ப பெற்று சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு வாழ்வு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story