தமிழகத்தில் சட்டவிரோத மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் சட்டவிரோத மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழகத்தில் சட்டவிரோத மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் மதுபான பார்கள் செயல்படுகின்றன. சென்னை அண்ணாநகரில் உள்ள வணிக வளாகம் மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின்போது ஒருவர் மரணமடைந்ததை அடுத்து, அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மொட்டைமாடி பார்களில் மதுபானங்கள் தவிர போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப்பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story