பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு


பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு
x

பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

குண்டும் குழியுமாக உள்ளது

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் கீழமிக்கேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பொதுப்பாதையானது இருபுறமும் குறுகிய நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன.

இப்பகுதி வழியாகவே விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களையும், விளைவித்த பொருட்களையும் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பாதையை சீரமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரப்புகளை அகற்றி, விவசாயத்தை காக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கல்லக்குடியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவசர நேரத்தில் பஸ் வசதி இல்லாத நிலையில் மருத்துவ வசதி பெற இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது.

எனவே சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கல்லக்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க கீழப்பழுவூர் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரைகளை பலப்படுத்த வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தண்டபாணி அளித்த மனுவில், கல்லக்குடி கிராமத்தில் பாசனத்திற்கு பயன்படும் ஏரிகள் அதிகம் உள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நடுவழி ஏரி, பிடாரி குளம் மதகேரி மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு சொந்தமான ஏரிகளும் உள்ளன. மழை காலம் தொடங்குவதற்கு முன்பு நீர்வரத்து வாய்க்கால்களின் கரைகளை உயர்த்தி, தேவையான இடங்களில் கல் சுவர் எழுப்பி கரைகளை பலப்படுத்த வேண்டும். பழுதாகியுள்ள ஷட்டர்களை சீரமைத்து விவசாயிகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story