பழங்குடி மக்கள் விடுதலைக்கட்சி சார்பில் விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்
பழங்குடி மக்கள் விடுதலைக்கட்சி சார்பில் விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
பழங்குடி மக்கள் விடுதலைக்கட்சி சார்பில் விருத்தாசலம் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கமணி, மாநில அமைப்பாளர் ராமலிங்கம், கலியபெருமாள், மாவட்ட இணை செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மனை வழங்கப்பட்ட இடத்திற்கு மனை வாரி பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பியபடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பழங்குடி மக்கள் விடுதலைக்கட்சியினர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சப- கலெக்டர் பழனியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பழனி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் பழங்குடி மக்கள் கட்சி நகர துணை செயலாளர் வேல்முருகன், ராஜேந்திரன், விருத்தாசலம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீராசாமி மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.