எலும்பு அரவை ஆலையை அகற்றக்கோரி குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


எலும்பு அரவை ஆலையை அகற்றக்கோரி குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எலும்பு அரவை ஆலையை அகற்ற வேண்டும் என்று தென்காசியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உட்பட 410 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

கடையம் அருகே உள்ள பெரும்பத்து பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் கிராமத்தின் அருகே தனியார் எலும்பு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் குமட்டல், மூக்கு அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே அந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

வெங்கடாம்பட்டி பஞ்சாயத்தில் அரசின் நலத்திட்டங்களை அனைவருக்கும் பாகுபாடு இன்றி செயல்படுத்த வேண்டும் என்று கோரி அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அன்பழகன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் நியாஸ் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி செங்கோட்டை ஒன்றிய தலைவர் முகமது சபிக் கொடுத்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களை நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் தேர்வு செய்து அரசு ஆவணங்களில் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், ஆதிதிராவிட நல அலுவலர் நடராஜன், வழங்கல் அலுவலர் சுதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story