நயப்பாக்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ் வசதி கோரி பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு
நயப்பாக்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ் வசதி கோரி பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் புதுவள்ளூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நயப்பாக்கம் கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுடன் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பஸ் வசதி கேட்டு மனு அளித்தனர். அதில் நயப்பாக்கம் கிராமத்தை ஒட்டி கிறிஸ்துவ கண்டிகை, பாப்பரம்பாக்கம், மங்காத்தா குளம், மேவலா குப்பம், தண்டலம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் போதுமான பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு மாணவ, மாணவிகள் அங்கிருந்து நடந்தே வருவதாகவும் இதில் வழியில் பெண் பிள்ளைகளுக்கு ஆபத்துக்கள் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அவசர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நயப்பாக்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.