பூரண மதுவிலக்கு கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு
பூரண மதுவிலக்கு கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மதுபாலா தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 394 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.32 ஆயிரம் மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கருணாகரன், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.