விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி
தொட்டியம் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிராம இளைஞர்கள் மனு கொடுத்தனர்.
தொட்டியம்,
தொட்டியம் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிராம இளைஞர்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 612 பேர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர்.
கூட்டத்தில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுபோல் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
விளையாட்டு மைதானம்
தொட்டியம் அருகே ஏலூர்பட்டி கிராம இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. எனவே இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள அரசு இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கூட்ட முடிவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், 13 பேருக்கு ரெயில் பயணம் செய்வதற்காக இலவச பயண அட்டை, 2 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.