வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் - எடப்பாடி பழனிசாமி சாடல்


வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் - எடப்பாடி பழனிசாமி சாடல்
x

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

'டாஸ்மாக்' மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள், தொடர்புடைய நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை உள்பட சில பகுதிகளில் இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கரூரில் நேற்று சோதனை நடத்த சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். வருமானவரித்துறையினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் முதல்-அமைச்சரின் மகனும், மருமகனும் 30,000 கோடி ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாடிய டேப் லீக் ஆனதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வரும் துறையில் ஒன்றான டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட பார்களின் லைசென்ஸ்கள் புதுப்பிக்கப்படாமல், சட்டத்திற்குப் புறம்பாக அவரது கரூர் கம்பெனியால் நடத்தப்படுவதாக அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதனால், தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கான வரி இழப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த சட்டவிரோத பார்கள் மூலம் கலால் வரி செலுத்தப்படாமல் மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து நேரடியாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாக, அப்போதைய நிதி அமைச்சர் பேட்டி அளித்திருந்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 10/- ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்துத் தரவேண்டும் என்று, தாங்கள் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்களால் வற்புறுத்தப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களே குற்றஞ்சாட்டி பேட்டி அளித்துள்ளனர். இதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்று நாளிதழ்களும், ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

செந்தில்பாலாஜி, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததாகக் கூறியுள்ளார். இதே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மீது பொய்யான புகார்கள் புனைந்து தமிழக காவல் துறையால் சோதனைகள் செய்ததையும், அப்போது, கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ. வீட்டில் சுவர் ஏறி குதித்த தமிழக காவல் துறை நடவடிக்கையை ரசித்தவர்கள்தானே விடியா திமுக ஆட்சியாளர்கள்.

முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும்; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வந்த செய்திகளின் அடிப்படையில் விசாரிக்க முறையாக வந்த மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை கரூரில் திமுக குண்டர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான வருமான வரித்துறை பெண் அதிகாரி உட்பட 4 பேர், கரூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது, நம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரனமாகும். மாநில அரசு அதிகாரிகளும் திமுக குண்டர்களால் தாக்கப்படுகின்றனர். இப்போது மத்திய அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்துப் பேட்டியளித்த கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், எங்களிடம் சொல்லாமல் சோதனைக்கு வந்துவிட்டனர் என்று கூறுகின்றனர். நடந்த அனைத்தையும் ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கி, தன்னை அதிமேதாவி என்று காட்டிக்கொள்ளும் ஆலந்தூர் பாரதி திருடர்களும், கொள்ளையர்களும் இரவில்தான் வீடு புகுவார்கள்; அதுபோல் வருமான வரித்துறையினர் இரவில் புகுந்ததாக சொல்கிறார். ஆலந்தூர் பாரதி தமிழ்நாட்டில் திருடர்களும், கொள்ளையர்களும் இரவில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாரா?

மேலும், முதல்-அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளபோது, வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். முதல்-அமைச்சருக்கும், வருமான வரித்துறைக்கும் என்ன சம்பந்தம்? 2006-2011 காலக்கட்டத்தில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணியின்போது, கலைஞர் டி.வி-யில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தவில்லையா? அதை, அப்போதைய தமிழக ஆளும் கட்சியான மைனாரிட்டி திமுக அரசு, மடியில் கனமிருந்தால், வழியில் பயந்துதான் ஆக வேண்டும் என்ன சொன்னது ?

மேலும், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர், வருமான வரித்துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வந்திருந்தால் தக்க பாதுகாப்பு அளித்திருப்போம் என்று கூறுகிறார். ஒரு அகில இந்திய காவல் பணி அதிகாரி எப்படி இவ்வாறு பொது வெளியில் பேட்டி அளிக்கிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

காவல் துறை திருடர்களை பிடிக்கப் போகும்போது இப்படித்தான் தகவல்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, அவரது காவல்துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்து வந்திருந்தால், முக்கிய நபர்கள் அவர்களது வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களையும், பல கோடி பணத்தையும் பதுக்கி இருக்கலாம்; அது முடியாமல் போய்விட்டதே என்ற ஆற்றாமையும், ஆதங்கமும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளுக்கும் இருப்பது போல் பேட்டி அளித்திருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தான் ஒரு அதிகாரி என்பதை மறந்துவிட்டு திமுக உறுப்பினர் போல் செயல்படுவது கண்டிக்கத் தக்கதாகும்.

மேலும், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது, மாநிலத்தில் பல இடங்களில் வருமான வரித்துறையினர், ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தினார்கள். அந்த சமயங்களில் மு.க.ஸ்டாலின் அந்த சோதனைகளோடு, எங்களை தொடர்புபடுத்திப் பேசி பத்திரிக்கைகளில் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் இப்போது, கடந்த இரண்டு நாட்களாக செந்தில்பாலாஜி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள் என்று பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த தனியார் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடந்தாலும், அதில் எங்களை சம்பந்தப்படுத்தி அறிக்கை விடும் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தற்போது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்படும்போது இதை கண்டிக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story