பூரண மதுவிலக்கு கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி நாம் தமிழர் கட்சியினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் யுவராணி சுரேஷ் தலைமையில், மண்டல செயலாளர் டாக்டர் பாஸ்கர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் மதுவால் எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு பல்வேறு சமூக சீரழிவுகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளுக்கும், சாலை விபத்துகளுக்கும் மது முக்கியமான காரணமாக உள்ளது. சமூக சீரழிவுக்கு காரணமான மதுபானங்கள் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதன் மூலம் அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பது தெரிகிறது. இதுவரை டாஸ்மாக் மதுபானத்தால் ஏற்பட்ட சீரழிவுகளுக்கு அரசே பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த முன்வர வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அதிக இடங்களில் வழிகாட்டுதல் முகாம்களை அமைத்து மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சை, அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.