பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 31 July 2023 10:04 PM IST (Updated: 1 Aug 2023 2:31 PM IST)
t-max-icont-min-icon

பட்டா வாங்கித்தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமையில் ஆதிதிராவிட மக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெற்றுத்தருவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு மூலம் இலவச பட்டா பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கர் என்பவரின் பழக்கம் கிடைத்தது. பின்னர் அவர் என்னிடம், தன்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உதவியாளர் என்றும், பட்டா பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்கு பணம் பெற்றுக்கொடுத்தால் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

இது பற்றி என்னிடம் வருபவர்களிடம் கூறினேன். அவர்களும் பணம் கொடுத்தார்கள். இவ்வாறு 150 விண்ணப்பங்களுக்கு பட்டா பெற ரூ.14 லட்சத்தை சங்கரிடம் கொடுத்தேன். அதன்பிறகு அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துவிட்டேன். எனக்கு இனி பணம் கொடுத்தால்தான் பட்டா பெற்றுக்கொடுப்பதாக கூறினார். திருப்பூர் தாசில்தாரை சந்தித்து விவரம் கேட்டபோது, சங்கர் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story