பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்தமைக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேரறிவாளன், "முதல் அமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. என்னை கட்டியணைத்து முதல் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். நான் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறேன். எனது எதிர்காலம் குறித்து எந்த உதவியையும் கேட்கவில்லை.

எனது விடுதலை குறித்து முதல் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். எனது குடும்பத்தின் சூழ்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்"என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!

சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story