தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி முன்னிலை வகித்தார். அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 மனுக்கள் வழங்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அந்தந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தம்பதி கோரிக்கை
புளியரை அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்த ராமன் (வயது 92) என்பவர் தனது மனைவியுடன் வந்து மனு கொடுத்தார். அதில், நாங்கள் இருவரும் எனது மகளின் வீட்டில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருகிறோம். எனது சுய சம்பாத்தியத்தில் கிரையம் பெற்ற இடத்தை எனது மகன் கண்ணனுக்கும், எனது பேரன் முருகேசனுக்கும் கிரையம் செய்து கொடுத்தேன். என்னையும், எனது மனைவியையும் கடைசி வரை உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதாக எனது மகன் கூறியதால் இந்த சொத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தேன்.
ஆனால் இப்போது என்னையும், எனது மனைவியையும் வீட்டை விட்டு எனது மகன் துரத்தி விட்டான். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மகன் மற்றும் பேரன் யாரும் எங்களுக்கு எவ்வித பண உதவியோ, மருத்துவச் செலவோ, உணவு, உடையோ கொடுக்கவில்லை. வயதான காலத்தில் நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே நான் பத்திரப்பதிவு செய்து கொடுத்த ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
பாப்பான்குளம் விவசாய சங்க தலைவர் முருகன் கொடுத்துள்ள மனுவில், பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள ராமசாமி கோவிலில் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். பவுர்ணமிக்கு முதல் நாள் தேர் திருவிழா நடைபெறும். தேர் வலம் வரும் ரதவீதியில் செங்கோல் மட ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் எழுப்புகின்றனர்.
வருவாய் துறை கணக்கில் புதிய வரைபடத்தில் புறம்போக்கு நிலங்களையும், தனிநபர் இடங்களையும் சேர்த்து அவர்கள் பெயரில் பட்டா இருப்பதை வைத்துக் கொண்டு சுவர் கட்டுகிறார்கள். கோவிலுக்கு சொந்தமான தேர் பகுதியில் உள்ள கல் மண்டபம் அவர்களிடத்தில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இந்த பணியை நிறுத்தாவிட்டால் தேர் திருவிழா நடத்த முடியாது. எனவே பழைய கிராம கணக்கில் உள்ளபடி இடத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை
கடபோகத்தி குபேரபட்டினத்தை சேர்ந்த சந்திரசேகர் கொடுத்துள்ள மனுவில், எனது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு மத்திய அரசு அறிவித்த தேர்வுக்கு விண்ணப்பித்த போது டி.என்.டி. என்ற சாதி பிரிவு இருந்தது. விண்ணப்பித்து தேர்வில் வெற்றி பெற்று விட்டாள். ஆனால் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக கணினியில் விண்ணப்பிக்கும் போது எனது சாதி சான்றிதழின்படி டி.என்.டி. பிரிவில் பதிவேற்றம் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெற கணினியில் பதிவு செய்ய வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் புலிகள் கட்சி
தமிழ் புலிகள் கட்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் கொடுத்துள்ள மனுவில், கீழப்பாவூர் யூனியன் பகுதியில் குணராமநல்லூர், ஆவுடையானூர், அரியப்பபுரம், திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், வடக்கு மடத்தூர், பெத்தநாடார்பட்டி, கழுநீர்குளம் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள், சமுதாய நலக்கூடம், தனி ரேஷன் கடை, பல்நோக்கு கட்டிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல் மற்றொரு மனுவில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு இலவச பஸ் பாஸ், 3 பேருக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 500 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.