மக்கள் குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூரில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த 279 மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஜோலார்பேட்டையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விநாயகமூர்த்தி அளித்துள்ள மனுவில் ஜோலார்பேட்டை ஒன்றியம், ரெட்டியூர் ஊராட்சியில் லட்சகணக்கில் முறைகேடு செய்து வரும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 2 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள பணிகள் விவரத்தை தணிக்கை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலால் உதவி ஆணையர் பானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.