நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
x

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் என திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி அருப்புக்கோட்டை காந்திநகரில் நடைபெற்றது. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ் தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், மருத்துவர் அணி கார்த்திகேயன், மாணவரணி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி வரவேற்றார்.


இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துகொண்டு கையெழுத்திட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை கொண்டு வர பா.ஜ.க.வும் அதற்கு உறுதுணையாக அ.தி.மு.க.வும் இருக்கிறது. இதனை ரத்து செய்ய தி.மு.க. இளைஞரணி இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. சாதாரண மக்கள் உயர்கல்வி படிக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள்.

மக்கள் இயக்கங்களை மாநாடுகளாக நடத்தக்கூடிய ஒரே இயக்கம், மகளிரை ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான். இது மகளிர் மாநாட்டில் பிரதிபலித்தது. போலி வாக்குறுதிகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பாலகணேசன், மாவட்ட இளைஞரணி, மாணவரணி தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் நன்றி கூறினார்.


Next Story