நில அளவை பணிகளுக்கு மக்கள் அலைக்கழிப்பு


நில அளவை பணிகளுக்கு மக்கள் அலைக்கழிப்பு
x

தேனி மாவட்டத்தில் நில அளவை பணிகளுக்கு மக்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக கண்காணிப்பு குழு கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

தேனி

கண்காணிப்பு குழு கூட்டம்

தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், தேனி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தற்போதைய நிலைமை, குறிப்பிட்ட காலகட்டத்தில் முடிவுறாத திட்டப் பணிகள், அதற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ப.ரவீந்திரநாத் எம்.பி. கேட்டறிந்து திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கினார்.

நில அளவை பணி

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் பேசும்போது, "நில அளவை பணிகளுக்கு பொதுமக்கள் பணம் கட்டிவிட்டு நீண்ட காலம் காத்திருக்கும் நிலைமை உள்ளது. இந்த பணிகளுக்காக அரசுக்கு மக்கள் பணம் செலுத்திய போதிலும் சில நிலஅளவையர்கள் வேறு எதிர்பார்ப்புடன் பணிகளை இழுத்தடிப்பது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது. நான் ஒரு நில அளவையர் அலுவலகத்தில் சென்று ஆய்வு செய்த போது அங்கு முறையான பதிவேடு கூட பராமரிக்கப்படுவது இல்லை. எனவே, நில அளவை பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்" என்றார்.

அதுபோல், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் பேசும்போது, "நில அளவை பணிகளுக்காக அரசுக்கு பணம் செலுத்திய 30 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக அளவீடு செய்யாமல் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பலர் என்னிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கின்றனர்" என்றார்.

அதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் பதில் அளிக்கையில், "நில அளவை பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களும் நில அளவை பணிகளில் ஈடுபடுவார்கள்" என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வித்யா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story