குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்
கோட்டூர் அருகே ஓவர்ச்சேரி கிராமத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
கோட்டூர் அருகே ஓவர்ச்சேரி கிராமத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஓவர்ச்சேரி பஸ் நிலையம் அருகே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. 3 மாதங்களுக்கு மேலாகியும் உடைப்பு சீரமைக்கப்படவில்லை. இதனால் கோட்டூர், புழுதிக்குடி, திருப்பத்தூர், திருக்களார், மீனம்பநல்லூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் போக்குவரத்து மிகுந்த மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சீரமைக்க கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கவும், கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், குடிநீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.