நெல்லை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்
ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக நெல்லை மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
நெல்லையில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் களைகட்டியது.
நெல்லை டவுன் போஸ் மார்க்கெட், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.
நேற்று முன்தினம் தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் நேற்று மார்க்கெட்டுகளில் குவிந்தனர். பூஜை பொருட்களுடன் தங்கள் வீட்டுக்கு தேவையான தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.
விலை உயர்வு
பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள் நேற்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.
அவல்பொரி
இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத்தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள்
நெல்லை மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று முன்தினம் உயர்ந்து காணப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் நேற்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை ரூ.1,200-ல் இருந்து நேற்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.
மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனையானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனையானது.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை சந்திப்பு பகுதியிலும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். ஜோடி வாழைக் கன்றுகள் தரத்துக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையானது. மக்கள் கூட்டம் அதிகமானதையொட்டி நெல்லை, பாளையங்கோட்டையில் மார்க்கெட் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.