நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி


நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கு விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இந்த கிடங்கில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து விருத்தாசலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நுகர்பொருள் வாணிப கிடங்கால் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் பகுதி மக்கள் புதிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஆம், இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்படும் அரிசி, கோதுமை மூட்டைகளில் வண்டுகள் உற்பத்தியாகி உணவுப் பொருட்களை நாசம் செய்கின்றன. அதோடு மட்டுமின்றி வடக்கு பெரியார் நகர் பகுதியில் இந்த வண்டுகள் படையெடுத்து சென்று வீடுகளில் குடியேறி விடுகிறது. மேலும் அவை தின்பண்டங்கள், அரிசி, கோதுமை, பயறு வகை பயிர்கள், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களையும் நாசம் செய்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு தொல்லைகளையும் அந்த வண்டுகள் கொடுத்து வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய கருத்துகள் இதோ...

குடைச்சலை கொடுக்கும் வண்டுகள்

சிவசங்கரி:- நுகர்பொருள் வாணிப கிடங்கில் உற்பத்தியாகும் வண்டுகள், அங்கிருந்து வெளியேறி எங்களது வீடுகளில் சமையலறை முதல் படுக்கை அறை வரை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எத்தனை முறை வீடுகளை சுத்தம் செய்தாலும் வண்டுகள் தொல்லை குறைந்தபாடில்லை. இரவு நேரங்களில் தூங்கும்போது குழந்தைகள், முதியவர்கள் என அனைவரது காதுகளிலும் நுழைந்து பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது. இது குறித்து நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகளிடம் கேட்டபோது, மருந்து தெளித்து வண்டுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் எங்கள் வீட்டிற்குள் வண்டுகள் எப்படி வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள், எங்கள் பகுதியில் ஒரு நாள் வசித்தால்தான், நாங்கள் படும்பாடு அவர்களுக்கு தெரியும்.

தடுக்காவிட்டால் போராட்டம்

மணிகண்டன்:- நுகர்பொருள் வாணிப கிடங்கில் உற்பத்தியாகும் வண்டுகளை தடுக்க போதிய மருந்துகள் தெளிப்பதில்லை. இதனால் அவை அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கிறது. சின்ன, சின்ன வண்டுகளாக இருப்பதால் நமது கண்களுக்கே தெரிவதில்லை. காதிலும் நுழைந்து சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சாப்பாட்டிலும், குடிக்கும் தண்ணீரிலும் கூட இந்த வண்டுகள் கிடக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.


Next Story