மின்தடையால் பொதுமக்கள் அவதி


மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 Oct 2023 4:15 AM IST (Updated: 27 Oct 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி நடைபெற்ற பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தேனி

கடமலைக்குண்டு கிராமத்தில் துணை மின்வாரிய நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாதத்தில் ஒரு நாள் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணி குறித்து ஒரு நாளுக்கு முன்பே மின்வாரியம் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் முன்னேற்பாடுகளை செய்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் காலை 10 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. ஏதேனும் பழுது காரணமாக மின் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் எண்ணினர். ஆனால் மாலை 6 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. பின்னர் விசாரித்தபோது மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்ற மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனர். எனவே முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வசதியாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story