சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே இடையார் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லங்குளம் கிராமத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த பகுதியில் தார் சாலை அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மண் சாலையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த மண்சாலை சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அந்த வழியாக சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். மேலும் கல்லங்குளம் கிராமத்தில் இருந்து துளாரங்குறிச்சி வரை இணைப்பு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த மண் சாலையானது தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஊருக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் இந்த கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் திரண்டு, சாலையை சீரமைக்க வலியுறுத்தினர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கல்லங்குளம் கிராமத்தில் இருந்து துளாரங்குறிச்சி வரை தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.