பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

கல்லிடைக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்லக்கோரி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி பொட்டல், மூலச்சி, மலையன்குளம், மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து தினமும் நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்கள் வேலை செய்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ்சும், டவுன் பஸ்சும் கரம்பை நிறுத்தத்தில் நிற்பதில்லை எனவும், இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் வக்கீல் பார்த்திபன் தலைமையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் கல்லிடைக்குறிச்சி போலீசார் மற்றும் அம்பை தாசில்தார் சுமதி, போக்குவரத்து மண்டல மேலாளர் பூல்ராஜ், அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரம்பை பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story