மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் முறையாக வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் முறையாக வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் முறையாக வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் முறையாக வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மண்ணச்சநல்லூர்- திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் உள்ளது உளுந்தங்குடி. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பேரூராட்சி சார்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிலர் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விடுவதால் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று உளுந்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பிரச்சினை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தின் காரணமாக திருப்பைஞ்சீலியில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்ற 3 அரசு பஸ்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த அலுவலக ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story