மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்


மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்
x

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் மூட வலியுறுத்தி தஞ்சையில் மதுக்கடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் மூட வலியுறுத்தி தஞ்சையில் மதுக்கடையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக்கடைகள் மூடல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 15 கடைகள் மூடப்பட்டன. இதில் தஞ்சை மாநகரில் மட்டும் 11 கடைகள் அடங்கும். இதில் பிரதானமாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்தில் உள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று பொதுமக்கள், அந்த பகுதி வணிகர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் டாஸ்மாக் மூடப்பட்ட கடைகள் பட்டியலில் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை இடம் பெறவில்லை. இந்த நிலையில் இந்த கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையை மூட வலியுறுத்தினர். அவர்களிடம் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

வணிகர்களும் கடை அடைப்பு

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள், இன்னும் 20 நாட்களுக்குள் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.


Next Story